Sunday, June 15, 2014

கபீர்

கபீரின் கானங்களில் ஒன்று:

எங்கே தேடுவாய் என்னை?

நீ செல்லும்
புனித யாத்திரையிலா? இல்லை.

நீ வணங்கும்
உருவங்களிலா? இல்லை.

நீ செல்லும்
கோயில் அல்லது மசூதியிலா? இல்லை.

கபாவிலா அல்லது கைலாசத்திலா? இல்லை.

நான் உன்னுடன் தான் இருக்கிறேன், மனிதா,
உன்னுடன் தான்.

எங்கே தேடுவாய் என்னை?
நீ முணுமுணுக்கும்
பிராத்தனைகளிலா? இல்லை.

நீ கண்முடி அமர்ந்திருக்கும்
த்யானத்திலா? இல்லை.

நீ அனுதினம் அனுசரிக்கும்
நோன்புகளிலா? இல்லை.

கால்மடித்து, கைமடித்து செய்யும்
யோகாசனங்களிலா? இல்லை.

எதுவும் வேண்டாம் என்று
சொல்லும் துறவிலா? இல்லை.

உடலிலா அல்லது அதில்
உறையும் உயிர் சக்தியிலா? இல்லை.

எங்கும் வியாபித்திருக்கும்
அண்ட வெளியிலா? இல்லை.

விதையிலிருந்து விருட்சம் வரச்
செய்யும் இயற்கையிலா? இல்லை.

எங்கே தேடுவாய் என்னை?

தேடு – தேடி என்னைக் கண்டெடு.
தேடும் அந்த தருணத்தில் -
கபீர் சொல்கிறான் தம்பி,
கவனமாகக் கேள்,
உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ
அங்குதான் நான் இருக்கிறேன்!

அவரவர் நம்பிக்கையைக்கொண்டு, எங்கெங்கும் வியாபித்திருக்கும் இறைவனை கண்டுகொள்வது மிக மிக எளிதானதே என்கிறார் கபீர் மகான்.

parthacud@gmail.com

No comments:

Post a Comment